பதக்கம் வெல்லுமா இந்தியா *துவங்குகிறது சுதிர்மன் பாட்மின்டன்

ஜியாமென்: பாட்மின்டன் அரங்கின் உலக கோப்பை என வர்ணிக்கப்படும், சுதிர்மன் கோப்பை தொடர் (கலப்பு அணிகள்) இன்று சீனாவில் துவங்குகிறது. இதுவரை நடந்த 18 தொடரில் சீனா (13), தென் கொரியா (4), இந்தோனேஷியா (1) என மூன்று அணிகள் மட்டும் தான் கோப்பை வென்றன. இந்திய அணி ஒரு முறை கூட 'டாப்-3' இடம் பிடித்தது இல்லை. 2011, 2017ல் காலிறுதிக்கு முன்னேறியது தான் அதிகபட்சம்.
இம்முறை 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'டி' பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா என வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
போட்டி எப்படி
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 போட்டி நடக்கும். புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு செல்லும்.
இந்திய அணியில் சிந்து, லக்சயா, பிரனாய் என அனுபவ நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கைகொடுத்தால் முதல் பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம். பெண்கள் இரட்டையரில் தனிஷா-துருவ் ஜோடியை நம்ப வேண்டும்.
ஆண்கள் இரட்டையரின் அனுபவ சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியது இந்தியாவுக்கு இழப்பு. இதனால் போதிய அனுபவம் இல்லாத ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி களமிறங்க உள்ளது.

Advertisement