ரூ.5.80 லட்சம் ஏமாற்றிய தமிழக பள்ளி ஆசிரியர் நிபந்தனை ஜாமின் வழங்கியது கர்நாடக ஐகோர்ட்

பெங்களூரு: சி.பி.ஐ., அதிகாரி என்று ஏமாற்றி, 5.80 லட்சம் பறித்த தமிழகத்தை சேர்ந்த ஆசிரியருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் சந்தன் உப்பின். 2024 ஆகஸ்ட் 6ம் தேதி இவருக்கு ஆகாஷ் சர்மா என்பவர் போன் செய்து, 'மும்பையில் உள்ள, 'பெட் எக்ஸ்' கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் பெயருக்கு பார்சல் வந்துள்ளது. அதில், சட்ட விரோத பாஸ்போர்ட், போதைப் பொருட்கள் உள்ளன' என கூறி வைத்து விட்டார்.
சி.பி.ஐ., விசாரணை
சிறிது நேரத்தில் மற்றொரு மொபைல் போன் எண்ணில் இருந்து சந்தன் உப்பினை, 'வாட்ஸாப்' வீடியோ காலில் தொடர்பு கொண்டனர். அதில் பேசியவர்கள், 'நாங்கள் சி.பி.ஐ., அதிகாரிகள், உங்களை கண்காணிக்க உள்ளோம்.
'உங்களின் வங்கி கணக்கு ஆக., 7ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, 'ஹேக்' செய்யப்படும். எனவே உங்கள் கணக்கில் உள்ள பணத்தை, ஆர்.பி.ஐ., பதிவு செய்யப்பட்ட சி.பி.ஐ., வங்கி கணக்கில் போடவும். பத்திரமாக இருக்கும். மாலை 6:00 மணிக்கு பின், மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்' என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய சந்தன் உப்பின், 5.80 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னும் தனது வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஆக., 8ம் தேதி மங்களூரு தெற்கு போலீசில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், நவ., 8ம் தேதி ஆசிரியராக பணியாற்றி வந்த தமிழகம் திருவாரூரின் அறிவொளியை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தனக்கு ஜாமின் வழங்க கோரி அறிவொளி முறையிட்டார்; ஆனால் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சிறை தண்டனை
இவ்வழக்கு, நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:
இவ்வழக்கில் மனுதாரர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மனுதாரர் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை. அவர் பள்ளி ஆசிரியராக உள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையும் முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இனியும் அவரை தொடர்ந்து கஸ்டடியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கான தனிப்பட்ட பத்திரம் வழங்க வேண்டும்.
விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை மிரட்டக்கூடாது. வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்களில் அவர் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!