ஒருபுறம் உள்வாங்கல், மறுபுறம் சீறிய அலைகள் திருச்செந்துாரில் அடுத்தடுத்து மாறிய சீதோஷ்ணம்

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரையின் ஒரு பகுதி உள் வாங்கியும், மற்றொரு பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாகவும் காணப்பட்டது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவில் கடற்கரையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

கடந்த 12ம் தேதி பவுர்ணமி என்பதால், கடல் 70 அடிக்கு உள்வாங்கி காணப்பட்டது. சில மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்றும் கடல் 500 மீட்டர் நீளத்தில் 100 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.

சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், அய்யா கோவிலில் இருந்து நாழிகிணறு வரை கடல் உள்வாங்கியதால், பாசி படிந்த பாறைகள் பச்சை வண்ணத்தில் வெளியே தெரிந்தன.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதில் ஏறி நின்று ஆச்சரியத்துடன் மொபைல் போனில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே, நேற்று மாலை, திடீரென கடல் அதிகளவில் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தைவிட அதிக உயரத்தில் அலைகள் எழும்பின.

கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் வெளியே வந்தது. கோவில் முன் அலைகள் கரையை தாண்டி வந்ததால், பக்தர்களிடயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரையில் வியாபாரம் செய்ய வைத்திருந்த தற்காலிக கடைகள் கடல் நீரில் நனைந்தன.

ஒருபக்கம் கடல் உள்வாங்கியும், மறுபுறம் அதிக சீற்றத்துடனும் காணப்படுவதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement