பாம்பனில் சிக்கிய கூரல் மீன் ஒரு மீன் ரூ.86 ஆயிரம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு கூரல் மீனை ரூ.86 ஆயிரத்திற்கு வியாபாரி வாங்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள்.

இதில் ஒரு படகில் 31 கிலோவில் ஒரு கூரல் மீன் சிக்கியது. இம்மீனை வாங்க நுாத்துக்குடி, நாகையில் இருந்து சில மீன் வியாபாரிகள் வந்தனர். இவர்களிடையே ஏற்பட்ட போட்டா போட்டியில் ஒரு கிலோ ரூ. 2800க்கு வாங்கியதால், ஒரே மீன் ரூ. 86,800க்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பாம்பன் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில்: கூரல் மீன் வயிற்றில் வெள்ளை நிறத்தில் குழாய் போன்று 1 முதல் 2 அடி நீளத்தில் குடல் இருக்கும். இதனை மருத்துவம் மற்றும் மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்துவதால் இதற்கு மவுசு அதிகம். தற்போது சிக்கிய பெண் மீனில் வெள்ளைநிற குடல் சிறியதாக இருக்கும். இதனால் விலை குறைவு. ஆண் மீனில் குடல் பெரிதாக இருக்கும். இதனால் விலை அதிகம் என்றார்.

Advertisement