பொன்முடி பேச்சு குறித்து மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல சபாநாயகர் அப்பாவு கோபம்

9

திருநெல்வேலி : அமைச்சர் பொன்முடி மீது கட்சி நடவடிக்கை எடுத்து விட்டது. அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்த விழாவில் 9.62 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 1,384 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியது: சனாதனத்தின் அடிப்படை மக்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்துவதுதான். இதைத்தான் துணை முதல்வர் விமர்சித்தார். சனாதனம் இந்திய அரசியல் அமைப்பல்ல. இந்திய அரசியல் அமைப்பு சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதனை மத்திய அரசும் கவர்னரும் ஏற்க மறுக்கிறார்கள்,.

மேலும், காவிரி நீர்ப்பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற பல்வேறு விஷயங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்கவில்லை. நீதிபதியை நீக்கி, சட்டத்துறை அமைச்சரை தேர்தல் ஆணையராக நியமித்தது நடுநிலையான செயலாக முடியாது. தீர்ப்பையே மதிக்காதவர்கள் நீதிமன்றத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

அமைச்சர் பொன்முடி பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தொடர்பாக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார். அந்த பேச்சில் யாருக்கும் உடன்பாடில்லை. நல்ல பிரச்னைகளை கேளுங்கள். நன்மை பயக்காதவற்றை மீண்டும் மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மத்திற்கு உகந்தது அல்ல என்றார்.

Advertisement