ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு

1

புதுடில்லி: வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நாளை மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டியில்லாமல் ரூ.65 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை ஏப்.8ல் ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனாலும் வாத்ரா ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்.,15) காலை 10:45 அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வாத்ரா ஆஜரானார். மதியம் 1:30 மணி வரை அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு திரும்பிய வாத்ரா மீண்டும் 2:30 மணிக்கு அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். மாலை 6: 10 மணிக்கு விசாரணை முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். ராபர்ட் வாத்ராவிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நாளை காலை 11:00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு உள்ளனர்.

Advertisement