கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்

11


சிங்கப்பூர் : சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறை காகிதத்தில் எழுதிய ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணியாற்றியவர் ஏஞ்சலா யோ. இவர், நிறுவனத்தில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், கழிப்பறை காகிதத்தில் அனுப்பி உள்ளார்.


இந்த கடிதத்தை 'லிங்க்ட் இன்' சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த கடிதத்தில் ஏஞ்சலா யோ கூறியுள்ளதாவது: நான் ஒரு கழிப்பறை காகிதத்தைப்போல தேவைப்பட்ட போது இழிவாக நடத்தப்பட்டேன். தேவை ஏற்பட்ட போது பயன்படுத்தப்பட்டேன். தேவை முடிந்ததும் மறு சிந்தனை இன்றி தூக்கி எறியப்பட்டேன். அந்த வார்த்தைகள் எனது நினைவை விட்டு அகல மறுக்கிறது. ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வைக்க வேண்டும். அவர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மன கசப்புடன் அல்ல. இந்த மாதிரியான அனுபவம் விசுவாசமின்மையை குறிக்காது. நிறுவனத்தின் கலாசாரத்தைப் பற்றி அதிகம் பேசும்.



பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதை பிரதிபலிப்பதுடன், அவர்கள் செய்யும் பணிகளையும், அவர்கள் யார் என்பதையும் எடுத்துக்காட்டும்.


பணியாளர்கள் தங்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை இன்றே துவங்குங்கள் எனக்கூறி உள்ள அவர், அந்தப்பதிவுடன் கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்வு செய்தேன். வெளியேறுகிறேன் எனத் தெரிவித்து உள்ளார்.


இந்த ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement