'அணை அடிவாரம் நகராட்சி இருந்தும் குடிநீர் முறையாக செல்லாதது அதிருப்தி'


'அணை அடிவாரம் நகராட்சி இருந்தும் குடிநீர் முறையாக செல்லாதது அதிருப்தி'


மேட்டூர்:''மேட்டூர் அணை அடிவாரம், நகராட்சி பகுதி இருந்தும் குடிநீர் முறையாக செல்லாதது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது,'' என, தி.மு.க., கவுன்சிலர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி சந்திரா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
தி.மு.க., கவுன்சிலர் வெங்கடாசலம்(14வது வார்டு): நகராட்சியில், 5க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் செல்வதில்லை. மேட்டூர் அணை அடிவாரம், நகராட்சி இருந்தும் குடிநீர் முறையாக செல்லாதது மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் பல இடங்களில்
தார்ச்சாலை அமைக்கவில்லை. தேர்தல் வர உள்ளதால், மக்களை எப்படி சந்தித்து ஓட்டு கேட்பது என தயக்கமாக உள்ளது. உதவி பொறியாளர் மலர்: நகராட்சியில், 30 வார்டுகளில், 153 சாலைகள் அமைக்க கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதிஒதுக்கும்பட்சத்தில் அந்த சாலைகள் அமைக்கப்படும்.
தலைவி சந்திரா: பெரும்பாலான வீடுகளுக்கு பல நாட்களாக குடிநீர் வரவில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் வினியோகிக்கும் ஊழியர்களை அழைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.உறிஞ்சுவதே காரணம்அதேபோல் பல கவுன்சிலர்கள், சாலை, குடிநீர் பற்றாக்குறை போக்க வலியுறுத்தினர். அப்போது, 'பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதே முக்கிய காரணம். அந்த மோட்டார்களை அகற்ற நடவடிக்கை எடுத்தால் சீரான குடிநீர் வினியோகிக்க முடியும். அதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சில கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கமிஷனர் நித்யா, தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement