தமிழகத்தில் விவசாயிகள் ஆட்சி அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

நாகப்பட்டினம்:நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் அதற்கான அவசியத்தை அரசு உருவாக்கவில்லை என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

நாகையில், இந்திய கம்யூ., சார்பில் 30வது அகில இந்திய விவசாயிகள் தேசிய மாநாடு நேற்று துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டை கேரள மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் துவக்கி வைத்தார். செல்வராஜ் எம்.பி., வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டதால், தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன உள்ளனர். இந்தியா முழுவதும விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அலை, அலையாக டில்லி நோக்கி செல்கின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் போராடும் நிலை இல்லை. தமிழகத்தில் விவசாயிகள் ஆட்சி நடக்கிறது.

நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் அரசு நிலம் இலவசமாக கருணாநிதி கொடுத்தார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை, அறிவிப்பின் காரணமாக, 23 லட்சத்து 68 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

பல மாநிலங்களில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் போராடாமலேயே தலை நிமிர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் நடந்த விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பாஷை புரியவில்லை, மொழி புரியவில்லை. இருந்தாலும் இந்தியளவில் பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்திருக்கும் நிலையில் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisement