மளிகைக்கடை நடத்திய பெண் எரித்துக்கொலை * தமிழக வியாபாரி கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் காசர்கோடு அருகே குடித்துவிட்டு ரகளை செய்வது குறித்து போலீசில் புகார் செய்ததையடுத்து மளிகை கடை நடத்திய இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

காசர்கோடு அருகே பேடகத்தைச் சேர்ந்த ரமிதா 32, அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இக்கடை அருகே தமிழகத்தைச் சேர்ந்த ராமாமிர்தம் 57, பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் குடிபோதையில் ரமிதாவின் கடையில் சென்று ரகளையில் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேடகம் போலீசில் ரமிதா புகார் செய்ததன் பேரில் ராமாமிர்தத்தின் கடையை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.

இதனால் கோபத்தில் இருந்த ராமாமிர்தம் சில நாட்களுக்கு முன்னர் ரமீதாவின் கடைக்கு சென்று அவரது உடலில் பர்னிச்சர் கடைக்கு பயன்படுத்தப்படும் தின்னரை ஊற்றி தீ வைத்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் தீயை அணைத்து மருத்துவமனைக்கு ரமீதாவை அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ரமீதா நேற்று இறந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ராமாமிர்தத்தை நேற்று கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement