பேரம்பாக்கத்தில் நிறுத்தப்பட்ட 15 அரசு பேருந்துகள்...மீண்டும் இயக்கப்படுமா?: 25க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் எதிர்பார்ப்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 15 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துக்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்தில் பேரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. கடந்த 2007- - 08ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நரசிங்கபுரம், கூவம் இருளஞ்சேரி, காவாங்கொளத்துார் என, 25க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையம் திறப்பு விழா நடந்து, 17 ஆண்டுகளாகியும், தற்போது எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இங்கிருந்து, தடம் எண்: 583 என்ற அரசு பேருந்து தாம்பரத்திற்கும், தடம் எண்: 591 என்ற பேருந்து தி.நகருக்கும், தடம் எண்: 160, 160பி, 162 காஞ்சிபுரத்திற்கும், தடம் எண்: டி44 அரக்கோணத்திற்கும், 72 சி சென்னைக்கும் இயக்கப்பட்டன.

அதேபோல், பேரம்பாக்கம் வழியாக, தடம் எண்: 212 பேருந்து காஞ்சிபுரம் - திருப்பதி, தடம் எண்: 86ஏ பேருந்து நெமிலி - சென்னை, தடம் எண்: 107ஏ பேருந்து பனப்பாக்கம் - சென்னை, தடம் எண்: 138 பி திருத்தணி - சென்னை, தடம் எண்: 91பி தக்கோலம் - சென்னை, தடம் எண்: 91சி திருத்தணி - சென்னை, தடம் எண்: 91, 91ஏ திருத்தணி - பூந்தமல்லிக்கு இயக்கப்பட்டு வந்தன.

இதில், தடம் எண்: 583, 591, 91பி ஆகிய மாநகர பேருந்துகள் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் தவிர, மற்ற பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தற்போது இயக்கப்படும் மூன்று பேருந்துகளும் முறையாக இயக்கப்படுவதில்லை.

இதனால், பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.எல்.ஏ., உட்பட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், சில நேரங்களில் அளிக்கப்படும் புகார்களுக்கு பெயரளவிற்கு பேருந்துகளை இயக்கி விட்டு, அதன்பின் நிறுத்தி விடுகின்றனர். அரசு மாநகர மற்றும் விழுப்புர கோட்ட பேருந்துகள் முறையாக இயக்காததற்கு, பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக்காப்பளர் இல்லாததே காரணம் என, கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் கல்வி மற்றும் பணிகளுக்கு செல்வோர் மற்றும் பகுதிவாசிகள், தனியார் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும் ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவலநிலை தொடர்கிறது. சில நேரங்களில் விபத்தில் சிக்கும் ஷேர் ஆட்டோக்களால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, மாவட்ட நிர்வாகம், பேரம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்ட 15 அரசு மாநகர மற்றும் விழுப்புர கோட்ட பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். நேரக்காப்பாளரை நியமித்து பேருந்துக்கள் இயக்கத்தை காண்காணிக்க வேண்டுமென, 25க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் தகவலின்படி, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நிறுத்தப்பட்ட பேருந்துகள் குறித்து உயர் அதிகாரிகள் தான் தகவல் அளிக்க வேண்டும்.

அரசு விரைவு பேருந்து கிளை மேலாளர்,

திருவள்ளூர்.

Advertisement