நுாறு நாள் வேலை கேட்டு பெண்கள் ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம்

திருத்தணி ஒன்றியம் மேல்முருக்கம்பட்டு கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று பகல் திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

பின், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம், நுாறு நாள் வேலை வழங்குமாறு மனு அளித்தனர். தொடர்ந்து, அலுவலக நுழைவு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'எங்கள் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் உப்பு தண்ணீராக வினியோகம் செய்யப்படுகிறது.

'கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால், கொசுக்கள் பெருக்கத்தால் நோய் பரவுகிறது. குடிநீர் வரி செலுத்தினால் தான், ஏரி வேலை வழங்க முடியும் என்று ஊராட்சி செயலர் கூறுகிறார்' என, பல்வேறு புகார்கள் கூறி போராட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

கடம்பத்தூர்



கடம்பத்துார் ஊராட்சி, கடந்த 2024 டிசம்பர் மாதம் பேரூராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடம்பத்துார் ஊராட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் நுாறு நாள் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால், பகுதிவாசிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள் கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடம்பத்துார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, 'ஒன்றிய அலுவலர்கள் இருவரும், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் உங்களது கோரிக்கைகளை தெரிவியுங்கள்' என, தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement