விசைத்தறியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! விரைவாக சுமூக தீர்வு காண வலியுறுத்தல்

கூலி உயர்வை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் நடத்திய கடை அடைப்பு போராட்டத்துக்கு, சாமளாபுரம், காரணம்பேட்டை, தெக்கலுாரில் முழு ஆதரவு அளிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க உரிமையாளர்கள், கூலி உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த மார்ச், 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சோமனுார், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய சங்கங்களுக்கு உட்பட்ட, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதிலும் தீர்வு கிடைக்காத நிலையில், 11 முதல் 15ம் தேதி வரை, உண்ணாவிரத போராட்டம் அறிவித்து, கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதற்கிடையே, கூலி உயர்வை வலியுறுத்தி, கருமத்தம்பட்டி நகராட்சி மற்றும் அவிநாசி, சாமளாபுரம், கண்ணம்பாளையம் பேரூராட்சிகள் உட்பட, தெக்கலுார், பெருமாநல்லுார், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. விசைத்தறிகள் அதிகம் உள்ள சாமளாபுரம், காரணம்பேட்டை பகுதிகளில் முழுமையான கடையடைப்பு நடந்தது.
இது குறித்து, சோமனுார் விசைத்தறி சங்கத் தலைவர் பூபதி கூறுகையில், ''கூலி உயர்வை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின், நேற்று, கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு, அனைத்து வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், முழுமையான ஆதரவு அளித்தனர். இதற்கிடையே, நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாக கூறப்பட்டது. இதனால், விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்,'' என்றார்.
அவிநாசி வட்டாரத்தில்...
உண்ணாவிரத போராட்டத்தின் கடைசி நாளான நேற்று விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக, தெக்கலுாரிலும், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், காரணம்பேட்டை மற்றும் அன்னுார் ஆகிய பகுதிகளில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தெக்கலுார், கருவலுாரில், கடைகள் நேற்று அடைக்கப்பட்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விரைவில், அறிவிக்கப்படும் என கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
விசைத்தறித்தொழிலுக்கு, ஓ.இ., மில்களே ஆதாரமாக மாறியுள்ளன. விசைத்தறியாளர், வேலை நிறுத்த போராட்டத்தில் இருப்பதால், ஓ.இ., மில்களில் உற்பத்தியான நுால்கள் தேக்கமடைந்துள்ளன. நுால் வியாபாரிகள், இடைத்தரகர்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.
புதிய கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சோமனுாரில், தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது. விசைத்தறியாளரின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஓ.இ., மில்களும் நேற்று ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் செய்தன. மேலும், ஓ.இ., மில் உரிமையாளர்கள், விசைத்தறியாளரின் உண்ணாவிரத போராட்டத்திலும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகையில், 'கூலி உயர்வு பிரச்னை, விசைத்தறியாளர்களை காட்டிலும், ஓ.இ., மில்களை தான் அதிகம் பாதிக்கிறது. விசைத்தறியாளருக்கு ஆதரவாக, 60க்கும்மேற்பட்ட மில்கள், ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தியுள்ளன. இனியாவது தமிழக அரசு தலையிட்டு, விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வை நிர்ணயித்து, தடையின்றி கூலி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,' என்றனர்.
- நமது நிருபர் குழு -
மேலும்
-
பெண்கள் மீதான வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
-
இன்றைய மின் தடை கள்ளக்குறிச்சி
-
'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது
-
24 மணி நேரமும் மதுபானம் விற்பனை பாட்டிலை அடித்து நொறுக்கிய பெண்கள்
-
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு
-
அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலமாகும் 'கொடை' ஏரி