தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1944ம் ஆண்டு மும்பை துறைமுக வளாகத்தில் சரக்கு கப்பல் தீ விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் 71 தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். இதன் நினைவாகவும், நாடு முழுதும் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அலுவலர் இருசம்மாள் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார், நிலைய அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு நிலை அலுவலர் வீரபாண்டியன் வரவேற்றார். உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட 'ஸ்துாபி'க்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு, கவரைத்தெரு, மந்தைவெளி வழியாக மீண்டும் தீயணைப்பு நிலையம் வரை பைக் ஊர்வலம் நடந்தது. மேலும், தீ விபத்தில்லா இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement