ரூ.48,000 கோடி முதலீட்டு மோசடி; காங்., பிரமுகர் வீட்டில் சோதனை

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், 48,000 கோடி ரூபாய் முதலீட்டு மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரதாப் சிங் கச்சாரியவாஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 'பி.ஏ.சி.எல்., இந்தியா' மற்றும், 'பி.ஜி.எப்., லிமிடெட்' என்ற முதலீட்டு நிறுவனங்களை நிர்மல் சிங் பாங்கூ என்பவர் நடத்தி வந்தார்.
இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 48,000 கோடி ரூபாய் மோசடி செய்தார். இது தொடர்பாக நிர்மல் சிங் மற்றும் அந்நிறுவன இயக்குநர்கள் மீது, 2015ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
பொதுமக்களை ஏமாற்றி பெறப்பட்ட பணம் பல்வேறு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும், அதில் காங்., மூத்த தலைவர் கச்சாரியவாசுக்கு சொந்தமான நிறுவனங்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, 706 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை முடக்கியது. மோசடி முதலீட்டு நிறுவனத்தை நடத்திய நிர்மல் சிங் பாங்கூ கடந்த ஆண்டு ஆகஸ்டில் உயிரிழந்தார்.
இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரதாப் சிங் கச்சாரியவாஸ் வீடு, அலுவலகம் உட்பட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, கச்சாரியவாஸ் தெரிவித்தார். இவர், முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தின் சகோதரர் மகன்.


