'இந்தியா - பாக்., உறவு சீர்குலைய மும்பையில் நடந்த தாக்குதலே காரணம்'

நர்மதா : ''இந்தியா - பாக்., நட்புறவு சீர்குலைவதற்கு மும்பை தாக்குதலே காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
குஜராத்தில் இருந்து, பா.ஜ., சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அம்மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நர்மதா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை, எம்.பி., என்ற முறையில் அவர் தத்தெடுத்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக குஜராத்துக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நர்மதா மாவட்டத்தில், தான் தத்தெடுத்த கிராமங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை இரண்டாவது நாளாக நேற்று நேரில் பார்வையிட்டார்.
லாச்ராஸ் என்ற கிராமத்துக்கு சென்ற அவர், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, ராஜ்பிப்லா என்ற கிராமத்துக்கு சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா உதவி மையத்தை பார்வையிட்டார். மேலும், அந்த கிராமத்தில் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''பாஸ்போர்ட் சேவை மையம் சிறப்பாக செயல்படுகிறது. நவீன உடற்பயிற்சி கூடம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையங்கள் என, மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
''கடந்த 2008ல் மும்பையில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியா - பாக்., நட்புறவு சீர்குலைவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. ''ஆனாலும், பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை. தன் மோசமான அணுகுமுறையை தொடர்கிறது,'' என்றார்.
