மேற்கு வங்க கலவரத்தில் வங்கதேசத்தவருக்கு பங்கு? கண்காணிப்பை தீவிரப்படுத்திய உள்துறை அமைச்சகம்

கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துஉள்ளது.
இதையடுத்து, கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டம், இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது.
வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக, இம்மாவட்டத்தின் சம்சர்கஞ்ச், துலியன், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
இதில், தந்தை - மகன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து ஹிந்துக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கலவரத்துக்கு கவலை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், வன்முறை பகுதிகளில் கூடுதல் அளவில் துணை ராணுவ படையினரை நிறுத்தி உள்ளது.
உள்துறை அமைச்சகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திரிணமுல் காங்., நிர்வாகிகள் ஆதரவுடன், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கலவரத்தின் போது பொது சொத்துக்களை பாதுகாக்கத் தவறியது; ரயில்வே சொத்துக்கள் மீதான தாக்குதல்; போலீசாரின் செய லற்ற தன்மை குறித்து, மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குழு அமைத்து நேரில் சென்று விசாரணை நடத்தி, மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வன்முறை நிகழ்ந்த முர்ஷிதாபாத் மாவட்டத்தில், அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜாங்கிபூர், துலியான், சுட்டி, சம்சர்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இடங்களில், கடந்த 48 மணி நேரத்தில் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீண்டும் வரத் துவங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.