டிஜிட்டல் கைது மோசடி; ரூ.7.6 கோடி சுருட்டிய 4 பேர் சிக்கினர்

புதுடில்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரிடம் 7.6 கோடி ரூபாய் சுருட்டிய நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இணைய வழியில் பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகள், தற்போது டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் முதலில் அதிக பணப்புழக்கம் உள்ள நபர்களின் விபரங்களை திரட்டுகின்றனர். பின் அவர்களின் மொபைல் எண்ணுக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு சி.பி.ஐ., அமலாக்கத் துறை அல்லது சுங்கத் துறை அதிகாரிகள் போல் பேசுகின்றனர்.
அவர்களிடம் 'உங்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி குற்றம் நடந்துள்ளது. விசாரணை முடியும் வரை வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அரசு கணக்கிற்கு மாற்றுங்கள்' என கூறி பல கோடி ரூபாயை திருடுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்து விசாரித்து வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சமீபத்தில் டிஜிட்டல் கைது மோசடி கும்பல் 7.6 கோடி ரூபாயை சுருட்டியது. அந்த வழக்கில் கிடைத்த தகவல்களை வைத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் டிஜிட்டல் கைது மோசடியில் பங்கு வகித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.