'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல்! 'குற்றமற்றவர்' அறிக்கையை ஏற்காத சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு: 'முடா' வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'குற்றமற்றவர்' என்று லோக் ஆயுக்தா போலீசார் சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், மீண்டும் விசாரணை நடத்த லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளதால், சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக, தன் மனைவி பார்வதிக்கு முறைகேடாக, 14 வீட்டு மனைகள் பெற்றதாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்ஜுனசாமி, தேவராஜ் ஆகியோர் மீது லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத் துறையிடம், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார்.
முறைகேடு
கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததால், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், 'சித்தராமையா உட்பட நால்வரும் குற்றமற்றவர்கள்' என்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஸ்நேகமயி கிருஷ்ணா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'இவ்வழக்கில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அது தொடர்பான ஆவணங்களை, விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து உள்ளோம். ஆனாலும், குற்றமற்றவர் என்ற அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர். அந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
அமலாக்கத் துறை வக்கீல் வாதிடுகையில், 'முடா வழக்கு தொடர்பான விசாரணையில், சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதை லோக் ஆயுக்தா போலீசாரிடம் எங்கள் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், குற்றமற்றவர்கள் என்ற அறிக்கையை லோக் ஆயுக்தா போலீசார் சமர்ப்பித்து உள்ளனர்' என்றார்.
கேள்வி
நீதிபதி சந்தோஷ், ''லோக் ஆயுக்தா போலீஸ் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், உங்களின் நிலைப்பாடு என்ன?'' என, அமலாக்கத் துறை வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அமலாக்கத் துறை வக்கீல், 'அதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஏப்., 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
இறுதி அறிக்கை
இந்நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் நேற்று அளித்த தீர்ப்பில், ''இவ்வழக்கு விசாரணையில் லோக் ஆயுக்தா போலீசார் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ''அதன் பின்னரே, 'குற்றமற்றவர்' அறிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இந்த அறிக்கைக்கு எதிராக, அமலாக்கத் துறையும் வழக்கு தொடரலாம்.
''முடா வழக்கு தொடர்பாக, லோக் ஆயுக்தா மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை, மே 7ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.
லோக் ஆயுக்தா சமர்ப்பித்த அறிக்கையை, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று எண்ணியிருந்த முதல்வர் சித்தராமையாவுக்கு, சிறப்பு நீதிமன்றம், 'ஷாக்' கொடுத்து உள்ளது. அத்துடன் அமலாக்கத் துறைக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதால், சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


மேலும்
-
ரூ.6.80 கோடி போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு நபர் உட்பட 9 பேர் கைது
-
கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு
-
வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை
-
10ம் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேர்: திருச்சியில் மீட்ட போலீஸ்
-
பெண்கள் மீதான வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
-
இன்றைய மின் தடை கள்ளக்குறிச்சி