கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு

1

ஷிவமொக்கா : போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கஞ்சா வியாபாரியை, போலீஸ் எஸ்.ஐ., சுட்டு பிடித்தார்.

ஷிவமொக்கா பத்ராவதியை சேர்ந்தவர் நஸ்ரு என்ற நஸ்துல்லா, 21. இவர் பல மாதங்களாக கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது கஞ்சா கடத்தல், விற்பனை செய்ததற்காக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த சில நாட்களாக, பத்ராவதி பழைய நகர போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் பத்ராவதி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில், அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸ் எஸ்.ஐ., சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், அவரை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்ததும், ஏட்டு மவுனேஷை தாக்கி விட்டு, தப்பிக்க முயற்சித்தார். இதனால், எஸ்.ஐ., சந்திரசேகர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும், நஸ்ரு ஓடினார்.

இதனால், அவரது இடது காலில் சுட்டார். இதில், அவர் கீழே விழுந்தார். அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பத்ராவதி தாலுகா மருத்துவமனையிலும், நேற்று மேல் சிகிச்சைக்காக ஷிவமொக்காவில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement