வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை

மதுரை : திண்டுக்கல்லில் வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா விளக்க கூட்டத்தில் பங்கேற்க இருந்த பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிமை மதுரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர்.

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் வக்ப்வாரிய மசோதா குறித்த அக்கட்சியின் விழிப்புணர்வு குழுவில் உறுப்பினராக உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்றிரவு நடக்கயிருந்த வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா விளக்கக் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருந்தார்.

இதற்காக மதுரை வந்த இப்ராஹிம் பா.ஜ.,சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சிரில் ராயப்பன் வீட்டிற்கு சென்றார். அங்கு மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், நகர் பா.ஜ., தலைவர் மாரிசக்ரவர்த்தி அவரை சந்தித்தனர். பின்பு திண்டுக்கல் புறப்பட தயாரான நிலையில் அங்கு வந்த போலீசார், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அங்கு செல்லக் கூடாது' என இப்ராஹிமை தடுத்தனர். மீறி புறப்பட்டால் கைது செய்ய போவதாகவும் தெரிவித்தனர். பிறகு இப்ராஹிம் உள்ளிட்ட நால்வரையும் வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதுதொடர்பாக வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: வக்ப் வாரிய சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என ஸ்டாலின் பேசி வருகிறார்.

அது தவறு என பேசும் என்னை எங்கு சென்றாலும் கைது செய்வது என போலீஸ் மூலம் அடக்குமுறையை முதல்வர் ஏவி விடுகிறார். வக்ப் திருத்த சட்டமசோதா குறித்து பேசினால் கலவரம் வந்துவிடும் என போலீஸ் துறை சொல்வது நியாயமா.

சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தி.மு.க., எம்.பி.,க்கள் ஆ.ராஜா, கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி முபாரக், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா போன்றோர் பேசி வருகின்றனர். அதையெல்லாம் போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்றார்.

Advertisement