அம்முவும்... நானும்...!

''இந்த உலகில் யார் கண்களிலும் தெரியாத உண்மையான அன்பும், கனிவும், என் பப்பியிடம் இருந்தே கிடைக்கிறது. ஒரு பெண் தனியாக வசித்தால் என்னவெல்லாம் ஆட்கொள்ளுமோ அத்தனையில் இருந்தும் என்னை விடுவித்தது, என் புதிய பரிணாமத்தை எனக்கே அடையாளப்படுத்தியதில், அதன் பங்கே அளப்பரியது,'' என்கிறார் சென்னையை சேர்ந்த ஸ்மிருதி வெங்கட்.

'அம்மு- தி பக்' (Ammu- The Pug) என்ற பெயரில், செல்லப்பிராணி வளர்ப்போருக்கான பயனுள்ள தகவல்களை, சமூக வலைதளங்களில் பதிவிடும் இவர், 'செல்லமே' பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:

என் பூர்வீகம் கேரளா. இன்ஜினியரிங் முடித்து, ஐடி துறையில் பணி புரிய, கடந்த 2018ல் சென்னைக்கு வந்தேன். புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய தட்பவெப்ப சூழல், சொந்த ஊரில் இருந்து 700 கிலோமீட்டருக்கு அப்பால் தனியாக இருக்கிறோம் என்ற அழுத்தம் என, எக்கச்சக்க சவால்கள், கண்முன் நின்றன. இதை தவிடுபொடியாக்கியது, என் அம்மு தான்; இது, 'பக்' இன பப்பி. ஒன்றரை மாதத்தில் வாங்கினேன்;தற்போது ஆறரை வயதாகிறது.

ஆரம்பத்தில், பக் இன பப்பிகளை எப்படி வளர்ப்பது, அதன் குணாதிசயம், உடலியல் தன்மை குறித்து நிறைய விஷயங்களை இணையதளத்தில், கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிவேன். இப்போது, பக் மட்டுமல்ல, எந்த இன பப்பியை பற்றி, என்ன சந்தேகம் என்றாலும், வழிகாட்டும் அளவுக்கு, பப்பி வளர்ப்பில் தேறிவிட்டேன். புதிதாக பப்பி வளர்க்கும் பலருக்கும் நான்தான் இப்போது 'கைடு'.

அம்மு குட்டியாக இருந்தபோது, நீண்டதுாரம் பயணம் செய்யக்கூடாது என்பதற்காக, சொந்த ஊருக்கு கூட செல்லவில்லை. வாடகை வீட்டில், அம்முவை வைத்திருக்க அனுமதிக்கவில்லை. சொந்த வீடு வாங்கியே தீர வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. டிரைவிங் தெரியாமல் கார் வாங்கினேன். இப்படியாக என் எல்லா புதிய பரிணாமங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டது இந்த அம்மு தான்.

இவள் வருவதற்கு முன்பு, என் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை குறைவாகவே இருக்கும். இப்போது, இவளுக்காகவே, என் தனிப்பட்ட நலனில் அதிக அக்கறை காட்டுகிறேன். இவள் எனக்கு ஒரு குழந்தை மாதிரியாகிவிட்டாள். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, எங்கேயும் நகராமல் உடனிருப்பாள். என் முகம் வாடினால், இவள் கண்களில் இருந்து நீர்த்துளி கசியும்.

இவளுடன் நான் இருக்கும் தருணங்களை, புகைப்படம், வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்வதுண்டு. இதை பார்த்து, பலரும் தொடர்பு கொண்டு, அம்முவை பற்றி விசாரிக்கிறார்கள். பல கிலோமீட்டர் துாரம் பயணித்து, இவளை பார்க்க வருகின்றனர். இவளால் தான், என் நட்பு வட்டாரம் விரிந்தது. செல்லப்பிராணி பற்றி பேசுவதும், அனுபவங்களை பகிர்வதும் அலாதியானது.

இதை என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். தனிமையில் இருக்கும் பெண்கள், உளவியல் ரீதியான அழுத்தங்களுக்குஆட்படாமல் இருக்க, ஒரு செல்லப்பிராணி வளர்ப்பது மிக அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement