ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் சதீஷ், 51. இவர், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து, 50 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் ஒரு நாய் வாங்கியுள்ளாராம்...

என்னது... ?



ஒரு நாயின் விலை 50 கோடியா? என்ற ஆச்சர்யத்துடன் அவரிடமே விசாரித்தோம்.

அவருடன் ஓர் உரையாடல்:

உங்களை பற்றி?



சின்ன வயதில் இருந்தே, அரிய வகை பப்பி வளர்த்ததால் பள்ளி படிப்பு முடித்ததும், சொந்தமாக 'கென்னல்' வைத்தேன். சில ஆண்டுகளிலே, 'ப்ரீடிங்' துறையில், தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டேன். முன்பதிவு செய்து, என்னிடம் பப்பி வாங்கியோர் ஏராளம். 'இண்டியன் டாக் ப்ரீடர் அசோசியேஷன்' மற்றும் 'பெங்களூரு கென்னல் கிளப்' ஆகியவற்றின் தலைவராக இருக்கிறேன். உலகளவில் நடக்கும் நாய் கண்காட்சிகளுக்கு, நடுவராக இருந்து வருகிறேன். இதுவரை, 300க்கும் மேற்பட்ட, 'சாம்பியன்களை' உருவாக்கி இருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாகத்தான் ப்ரீடிங் துறையில் இருந்து விலகி அரிய வகை நாய்களை வாங்கி பராமரிப்பது, அதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். ஓராண்டில் பெரும்பாலான நாட்கள் ஈவன்ட்டுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக என் நாய்கள் பங்கேற்கின்றன. இதற்கு தனியாக கட்டணம் பெறுகிறேன்.

இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளாக சினிமா புரொமோஷன், விருது வழங்குதல் போன்ற, பிரமாண்டமான ஈவன்ட்களை நடத்தி வருகிறேன். மாடலிங் துறையிலும் கால் பதித்துள்ளேன். இதனால், வருமானத்திற்கு பஞ்சமில்லை. தொழில் சார்ந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரிய வகை பப்பி வாங்க செலவிடுகிறேன். பின், அந்த பப்பிகளை வைத்தே, அத்தொகையை சம்பாதித்து விடுவேன்.

என்னிடம் தற்போது பல்வேறு இனங்களை சேர்ந்த, 150 நாய்கள் இருக்கின்றன. இதில், 20 அரிய வகை நாய்களும் அடக்கம். 7 ஏக்கர் பரப்பளவில், ஒவ்வொரு நாய்க்கும் 20 அடி நீள, அகலத்தில் தனித்தனி அறைகள் அமைத்து, ஏழு வேலையாட்களை வைத்து, பராமரித்து வருகிறேன். இங்கு, சீதோஷ்ண நிலை குளிராக இருப்பதால், 'ஏ.சி.,' தேவைப்படாது..

அதிக விலை கொடுத்து நாய் வாங்க காரணம் என்ன?



நல்ல உடல்வாகு, தனித்திறன் கொண்ட நாய்களுக்கு, மார்க்கெட்டில் அதிக மவுசு உண்டு. இந்நாய்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை. அதிக ஆற்றல் வாய்ந்த நாய்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் இருக்கின்றன. இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அரிய வகை நாய்களின் விலையும் அதிகம்.

இதனால் தான், நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு அழைப்பாளராக, என் நாய்கள் பங்கேற்கின்றன. ஒரு நிகழ்ச்சியில் அரை மணி நேரத்திற்கு, ரூ. 2.5 லட்சம் வீதம் கட்டணமாக பெறுகிறேன். அதிகபட்சம் 3 மணி நேரம் வரை மட்டுமே என் நாய்கள் பங்கேற்கும். இதற்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.

ஒரு திரை நட்சத்திரத்தை விட, எனக்கும் என் நாய்க்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்தாண்டு, சீனாவில் இருந்து, அரிய வகை 'செள செள' இன பப்பி வாங்கினேன். இது, சீனாவை சேர்ந்த சிவப்பு மற்றும் வெள்ளை கரடி இனமான குயின்லிங் பாண்டா போலவே இருக்கும். இந்தாண்டு, அமெரிக்காவில் இருந்து, ரூ. 50 கோடிக்கு, 'கடபாம்ப் ஒகாமி' என்ற எட்டு மாத பப்பி வாங்கியிருக்கிறேன். இதன் காரணமாக, அரிய வகை நாய்கள் மற்றும் அதிக விலை கொண்ட நாய்கள் என்னிடம் மட்டுமே இருக்கின்றன என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறேன்.

கடபாம்ப் ஒகாமியின் தனித்துவம் என்ன…



ஒகாமி என்ற பிரிவை சேர்ந்த, கடபாம்ப் வகைநாய் மிக பழமையானது. இது, விலங்குகளிடம் இருந்து தோட்டத்தை பாதுகாக்க, முன்பு பயன்படுத்தப்பட்டது. மிக புத்திசாலியான நாய் என்பதோடு பாதுகாவல் திறன், அதீத ஆற்றல் கொண்டது. அமெரிக்காவில் ஓநாயுடன் முதன்முறையாக கலப்பினம் செய்து பிறந்ததுதான், இந்த கடபாம்ப் ஒகாமி இனம்.

உலகிலேயே இக்கலப்பினத்தில் பிறந்த முதல் பப்பியும் கூட. இது கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என கணிக்கப்படுகிறது. இதற்கு தற்போது வயது எட்டு மாதம்; 80 கிலோ எடையுடன் இருக்கிறது. அதிகபட்சம் 100 கிலோ வரை, எடை அதிகரித்து பின் அதையே தக்க வைத்து கொள்ளும். அடர்த்தியான முடியுடன், நீண்ட, கூரிய பற்களை கொண்ட இந்த நாய், பார்ப்பதற்கு ஓநாயை போலவே இருக்கிறது. இதன் பிரமாண்டமான உருவமே, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதம், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதால், இனி நாங்கள் இருவரும் படுபிசியாகிவிடுவோம், என்றார்.

Advertisement