கன்னியாகுமரி கால்வாய்களை சீரமைக்க ரூ.1,085 கோடி பத்தாது: அமைச்சர் தகவல்

சென்னை:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய்களை சீரமைப்பது குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பல அணைகளும்; தோவாளை, பட்டணம் கால்வாய் உள்ளிட்ட பெரிய கால்வாய்களும் உள்ளன. 2024ல் ஏற்பட்ட மழையால், கால்வாய்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

இதனால், குளங்கள், கால்வாய்களுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை. கடைமடை அணையில் இருந்து ராதாபுரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல, 200 கோடியில் நீரேற்று திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான நீர் இல்லாதபோது, நான்கு மாதங்களில் எப்படி 150 கன அடி நீர் எடுத்து செல்ல முடியும்? கால்வாய் ஆண்டு பராமரிப்பு நிதியை, 20 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

காங்கிரஸ் - ராஜேஷ்குமார்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வரும் கோதையாறு வடிநிலத்திற்கு உட்பட்ட கால்வாய்களை சீரமைக்க, 'வேப்காஸ்' நிறுவனம் வாயிலாக விரிவான திட்ட அறிக்கை, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிக்கு, 1,085 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட அறிக்கையை கூட, அந்நிறுவனம் வெளியிடவில்லை.

கால்வாய்கள் துார்ந்து கிடப்பதால், 4,000 குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராத சூழல் உள்ளது. மக்கள், விவசாயிகள் பிரச்னையில் தனி கவனம் செலுத்தி, முதல்வரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்:
நாஞ்சில் நாடு விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. எந்த தொழிற்சாலையும் அங்கு கிடையாது.

இந்த மாவட்டத்தில், ஆறுகள், கால்வாய்கள் மனிதன் நரம்பு மண்டலத்தில் ஓடுவது போல ஓடுகின்றன. இங்குள்ள ஆறுகளின் கரைகள், பெருமழையால் உடைந்து, நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; அதை இல்லை என்று சொல்லவில்லை.

திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம்; 'ரிசல்ட்' இன்னும் வரவில்லை. வந்தவுடன் முதல்வரிடம் எடுத்துக்கூறி நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிக்கு, 1,085 கோடி ரூபாய் பத்தாது; இன்னும் கூடுதல் நிதி தேவைப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement