குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்

தமிழகத்தில் சமீப காலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவலாக அதிகரித்து வருகிறது. இது போன்ற அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், அது தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி திட்ட அமைந்துள்ள பகுதிக்கான போக்குவரத்து, அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் உள்ளிட்ட விஷயங்களை சரியாக கவனிக்கனும். குறிப்பாக, மழைக்காலத்தில் வெள்ள பாதிபபு ஏற்படுமா என்பது குறித்து தெளிவான விசாரிப்பது அவசியம்.

அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு செயல்படுத்தப்படும் மொத்த நில பரப்பளவு என்ன, அதில் கட்டடத்தின் மொத்த பரப்பளவு என்ன என்பதை பாருங்கள். இதற்கு அடுத்தபடியாக உங்களுக்கான வீடு, அதற்கான பரப்பளவு, நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., போன்ற விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக ஒரு நிலத்தில் எத்தனை வீடுகள் கட்டப்படுகிறது என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டுக்குமான யு.டி.எஸ்., விகிதங்கள் முடிவு செய்யப்படும். இதில் நீங்கள் வாங்கும் வீட்டுக்கான மொத்த பரப்பளவில், 50 சதவீத அளவுக்காவது யு.டி.எஸ்., இருக்க வேண்டியது அவசியம்.

சில இடங்களில் வீடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வீடுகளுக்கான யு.டி.எஸ்., அளவு, 40 அல்லது, 35 சதவீதம் வரை இருப்பதை பார்க்க முடிகிறது. நீங்கள் வீடு வாங்கும் திட்டம் அமைந்துள்ள பகுதி நகரில் பிரதான இடத்தில் அமைந்து இருக்கும் நிலையில், யு.டி.எஸ்., அளவு குறைந்தாலும் அதன் மதிப்பு அதிகம் என்பதால் பெரிய பிரச்னை இருக்காது.

ஆனால், நிலத்தின் மதிப்பு மிக வேகமாக அதிகரிக்காத புறநகர் பகுதிகளில் மிக குறைவான யு.டி.எஸ்., கொடுக்கப்படும் திட்டங்களில் வீடு வாங்கும் போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, 15 முதல், 20 சதவீத அளவுக்கு யு.டி.எஸ்., ஒதுக்கப்படும் நிலையில் மறு விற்பனையின் போது பிரச்னை வரும்.

பொதுவாக அடுக்குமாடி திட்டங்களில் உள்ள வீடுகளை மறு விற்பனை செய்யும் போது, அதில் கட்டடத்துக்கான மதிப்பு, ஆண்டுக்கு, 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால், அதில் ஒதுக்கப்படும் யு.டி.எஸ்., நிலத்துக்கான சந்தை மதிப்பு எப்படி உயர்ந்துள்ளது என்று பார்க்கப்படும்.

யு.டி.எஸ்., நில மதிப்பு மிக வேகமாக உயராத இடங்களில் கட்டடத்தின் மதிப்பும் குறையும் சூழலில் வீட்டை மறு விற்பனை செய்யும் போது எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எனவே, வீடு வாங்கும் போதே, உங்களுக்கான யு.டி.எஸ்., அளவு என்னவாக உள்ளது என்று பார்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Advertisement