கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் சிலை சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
சென்னை:''கோவை செம்மொழி பூங்காவில், தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும்; தமிழறிஞர்களின் மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ் வளர்ச்சி துறை
கடந்த, 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டை நினைவுகூரும் வகையில், கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில், தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும்
தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை, 4,500ல் இருந்து, 7,500 ரூபாயாகவும், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 3,500ல் இருந்து, 7,500 ரூபாயாகவும், எல்லை காவலர்களுக்கு, 5,500ல் இருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்
தமிழறிஞர்கள், 10 பேரின் நுால்களை நாட்டுடமையாக்கும் பணிக்கு, 1.01 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
சென்னை மதுரவாயல் அடுத்த தண்டலத்தில் உள்ள திரு.வி.க., நுாலகம், 1 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, நினைவரங்கத்துடன், அவரது மார்பளவு வெண்கல சிலை நிறுவப்படும்
புதுடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்
புறநானுாற்று பாடலை இயற்றிய சங்க கால புலவர் குறமகள் இளவெயினிக்கு, மதுரையில், 50 லட்சம் ரூபாய் செலவில் சிலை நிறுவப்படும்
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்களில், 15 பேருக்கு, தேர்வு அடிப்படையில் மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு, 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும், 45 மாணவர்களுக்கு உணவு வழங்க, 12 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
செய்தித்துறை
குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டு விழா, சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்
பாரதிதாசன் நினைவாக, விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும்
வேலுார் அண்ணா கலையரங்கம், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குளிரூட்டப்பட்ட அதிநவீன கலையரங்கமாக புனரமைக்கப்படும்
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைப்பதற்கு போராடிய, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றிய பொன்னப்ப நாடார் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், நாகர்கோவிலில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவரது சிலை அமைக்கப்படும்
இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கும் வகையிலும், சென்னையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் துவங்கப்படும்
செய்தித்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து நினைவகங்களிலும், 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்பட்டு, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்
சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மண்டபம், தமிழ்மொழி தியாகிகள் மண்டபம், 2.50 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்
அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள், 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்
அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள், ஜூலை முதல் இணையவழியில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
மேலும்
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்