புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்தன்னார்வலருக்கு பயிற்சி
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்தில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட இணை இயக்குனர் பொன்குமார் பங்கேற்று பேசியதாவது:நாமக்கல் மாவட்டம், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக இருக்க வேண்டும். அதற்கு, தன்னார்வலர்களான நீங்கள் திறமையோடு உழைக்க வேண்டும். படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல. அதனால், முறைசார்ந்த படிக்காதவர்கள்
கவிஞர்களாக, எழுத்தாளர்களாக இருந்துள்ளனர்.அவர்கள் திறமை அவர்களுடன் மறைந்துவிட்டது. எழுதப்படிக்க தெரிந்திருந்தால், அவர்களின் திறன்களை ஆவணப்படுத்தியிருப்பர். வயது வந்தோர் கல்வி, அறிவொளி இயக்கம் போன்று புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம், புதுமையான இந்தியாவை படைக்க விரும்புகிறது.
அதற்கான முன்னெடுப்பில் புதிய பாரதம் எழுத்தறிவு இயக்கம் செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.வட்டார கல்வி அலுவலர்கள் சுப்ரமணியம், அருள் புனிதன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, வட்டார வள மைய பயிற்றுனர்கள் மகேஸ்வரி, கலைச்செல்வி, தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.