ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம்: மீனவர்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் ரூ.42.90 கோடியில் அமைக்கப்படவுள்ள ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் வருவதால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரப்பன்வலசையில் அமைக்கப்படவுள்ள ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையத்திற்கு மாவட்ட கடற்கரை மேலாண்மை குழுவில் அனுமதி பெறுவதற்கான கூட்டம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மீன் வளத்துறை, மன்னார் வளைகுடா காப்பகம், வருவாய்த்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை உட்பட 11 துறை அதிகாரிகள், மீனவர்கள் தரப்பில் குழு உறுப்பினர்களான ராயப்பன், செல்வராஜ், சின்னதம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமிக்கு அனுமதி வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை மீனவர்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அவர்கள் கூறியதாவது:
அகாடமி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் துாரத்திற்குள் வருகிறது. கடற்கரை மேலாண்மை மண்டலத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரை வலை மீன் பிடிப்பு பகுதியாகும். அந்த இடத்தில் எந்த ஒரு கட்டுமானத்தையும் அனுமதிக்க கூடாது. மீனவர்கள் இந்த பகுதியை பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வாழ்விடங்களையும் முற்றிலும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்திட்டத்தை மீனவர்கள் பயன்பாடில்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.