தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பதக்கங்களை குவிக்கும் சகோதரர்கள்

புதுச்சேரி: ரோலர் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் புதுச்சேரி சகோதரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

புதுச்சேரி சோலை நகரில் உள்ள கணேஷ் நகரை சேர்ந்த மீனவர் ஆராதரன்- பரிமளா தம்பதியினரின் மகன்கள் கிரிதரன் மற்றும் கிரிதாசன். புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள். இவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஐந்து வயது முதல் பங்கேற்று வருகின்றனர்.

இதில் கிரிதரன் மட்டும் 2023ம் ஆண்டு சீனாவில் நடந்த 19வது ஆசியா அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் தேசிய அளவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும் குஜராத்தில் நடந்த 36வது தேசிய விளையாட்டு போட்டியில் 'பேர்சிலம்' (இருவராக பங்கேற்பது) போட்டியில் பங்கேற்று 36 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரிக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இது மட்டுமின்றி மாநில அளவில் 10 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இவரைப் போல் இவரது தம்பி கிரிதாசன் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதங்கங்கள் மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் 10 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இது மட்டுமின்றி புதுச்சேரியில் நடந்த போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வாங்கி இருவரும் குவித்துள்ளனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க இவர்கள் இருவரும் போதிய நிதி ஆதாரமில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவ வேண்டும் கோரி உள்ளனர்.

Advertisement