சித்திரை திருவிழாவிற்காக வீரபாண்டி ஆற்றங்கரை சீரமைப்பு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக முல்லை பெரியாறு ஆற்றங்கரையில் மண் கொட்டி சீரமைப்பு செய்து வருகின்றனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா நேற்று நடந்தது.

திருவிழா மே 6ல் துவங்குகிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் முல்லைப்பெரியாறில் நீராடி அங்கிருந்து தீர்த்தம் எடுத்தும், அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை உள்ளிட்டவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதே பகுதியில் முடிகாணிக்கை செலுத்துவதற்கான கூடமும் அமைக்கப்படும்.

இப்பகுதியில் பக்தர்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் முல்லை பெரியாற்றங்கரையில் மண் கொட்டி சமதளப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் இரவில் பக்தர்கள் தேவையின்றி வருவதை தவிர்க்கவும் பணிகள் நடந்து வருகிறது.

அறநிலையத்துறையினர் கூறுகையில், ' பக்தர்கள் அக்னிசட்டி, காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை மே 6 முதல் செய்ய வேண்டும். ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, அங்கபிரதசட்சணம் உள்ளிட்ட வேண்டுதல்களை தற்போது மேற்கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement