ஆள் மாறாட்டம் செய்து பேராசிரியர் பணி நியமனம்; 20 ஆண்டுக்குப் பிறகு குட்டு அம்பலம்

6


டேராடூன்: குமாவுன் பல்கலை.,யில் ஆள் மாறாட்டம் செய்து பேராசிரியர் பணி நியமனம் செய்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


குமாவுன் பல்கலைக்கழகம் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலை.,யில் கலை, அறிவியல், வணிகம், சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளது. இந்த பல்கலையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி, 2005ம் ஆண்டு பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது.


மொத்தம் 58 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பேராசிரியர் பணிக்கு 4 பேர் மட்டும் தேர்வு செய்தனர். இதில் பவன் குமார் மிஸ்ராவும் ஒருவர். மற்ற மூவரும் உள்ளூர்வாசிகள். இதில் பவன் குமாருக்கு மட்டும் பணி நியமன ஆணையை பல்கலை நிர்வாக குழு அனுப்பவில்லை.
சில நாட்கள் கழித்து, பிரமோத்குமார் மிஸ்ரா என்ற பெயர் பவன் குமார் மிஸ்ரா என்று பிழையாக அச்சிடப்பட்டு விட்டதாக கூறி, பிரமோத்குமார் மிஸ்ராவுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.



இந்த விவரம் எதுவும் 20 ஆண்டுகளாக பவன் குமார் மிஸ்ராவுக்கு தெரியாது. சமீபத்தில் இது பற்றி தெரிய வந்ததும், பல்கலை துணைவேந்தரை பவன் குமார் சந்தித்து புகார் அளித்தார். ஆனாலும் எந்த பயனும் இல்லை. ஆள் மாறாட்டம் செய்து பல்கலை பேராசிரியர் பணி நியமனம் பெற்ற பிரமோத் குமார் மிஸ்ரா, தனக்கு பணி நியமனம் வழங்கிய இயற்பியல் துறையின் தலைவரது மகளை திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.


தனது வருங்கால மருமகனுக்கு மோசடியாக பணி நியமனம் வழங்குவதற்காக, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணி நியமனத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக பவன் குமார் மிஸ்ரா புகார் அளித்தார். இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். ''பலன் இல்லாத நிலையில் நீதிமன்றத்தை நாடினார். நான் பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர் ஆள்மாறாட்டம் நடந்த காரணத்தால் எனக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்படவில்லை'' என பவன் குமார் மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உத்தரகண்ட் நீதிமன்றம், பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி 2005ம் ஆண்டு பேராசிரியர் நியமனம் தொடர்பான பதிவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. புகார் அளித்த பவன்குமார் இப்போது காசியாபாத்தில் இயற்பியல் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement