துணை பயிற்சியாளர் அபிஷேக் நீக்கம் ஏன்... * இந்திய அணியில் புது குழப்பம்

புதுடில்லி: இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் காம்பிருக்கு நெருக்கமானவர் என்பதால், அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி சமீபத்திய நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதற்கான காரணம் பற்றி இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆய்வு செய்தது. அப்போது பயிற்சியாளர் குழுவில் செல்வாக்குமிக்க ஒருவர் அபிஷேக் நாயர் பற்றி புகார் தெரிவித்துள்ளார். இவர் 'டிரஸ்சிங் ரூமில்' இடம் பெற்றிருப்பது அணிக்கு நல்லதல்ல என குறிப்பிட்டுள்ளாார். இதையடுத்து புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை, பி.சி.சி.ஐ., நியமித்தது. அப்போதே அபிஷேக் நாயருக்கு தலைவலி துவங்கியது. ஏனெனில் இவரே 'பேட்டிங்' பயிற்சியாளராகவும் இருந்தார்.
மூவருக்கு 'கல்தா'
தற்போது துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து அபிஷேக் நாயரை பி.சி.சி.ஐ., நீக்கியுள்ளது. மூன்றாண்டு ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் 'பீல்டிங்' பயிற்சியாளர் திலிப், உடற்தகுதி நிபுணர் சோஹாம் தேசாய் நீக்கப்படுகின்றனர். புதிய உடற்தகுதி நிபுணராக தென் ஆப்ரிக்காவின் ஆட்ரியன் லி ரோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 2003, உலக கோப்பை தொடரின் போது பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பீல்டிங் பயிற்சியாளர் பணியை டென் டெஸ்காட்டே மேற்கொள்வார்.
பின்னணி என்ன
பேட்டிங் பயிற்சியில் அபிஷேக் நாயர் 41, கைதேர்ந்தவர். இவரது உதவியால் தான் தற்போதைய பிரிமியர் தொடரில் ரன் மழை பொழிவதாக டில்லி வீரர் ராகுல் தெரிவித்திருந்தார். கோல்கட்டா அணிக்காக பணியாற்றியதால், காம்பிருக்கும் பிடித்தமானவராக இருந்தார். மும்பை அணிக்காக விளையாடியதால், ரோகித்- அபிஷேக் சிறந்த நண்பர்கள். காம்பிர்-ரோகித் இடையே நல்லுறவு ஏற்பட உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பீல்டிங் பயிற்சியாளர் திலிப், அபிஷேக் என இருவரும் ரோகித் சர்மாவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். இவர்களது நீக்கம் பற்றி ரோகித் சர்மாவிடம் விவாதிக்கப்பட்டதா என தெரியவில்லை. உலக கோப்பை (50 ஓவர், 2027) வரை அபிஷேக் தொடர வேண்டுமென ரோகித் விரும்பினார். இதனால், இவரது நீக்கம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இது பற்றி பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'' பயிற்சி குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியமானவர், சீனியர் நட்சத்திர வீரர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 'பலிகடா' ஆக்கப்பட்டுள்ளார் அபிஷேக் நாயர். பதவி ஏற்ற 8 மாதங்களில் நீக்கப்பட்டுள்ளார்,''என்றார்.
பி.சி.சி.ஐ.,செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில்,''இன்னும் சில விஷயங்கள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளன. சில தினங்களில் விரிவான அறிக்கை அளிக்கப்படும்,''என்று கூறி நழுவினார்.

ஆதிக்கம் குறையுமா
டெஸ்ட் தொடரில் இந்திய 'பேட்டிங்' எடுபடாதது, 'டிரஸ்சிங் ரூம்' விஷயங்கள் 'லீக்' ஆனது போன்றவை அபிஷேக் நாயருக்கு எதிராக அமைந்தன.
* சமீபத்திய மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி (எதிர், ஆஸி.,) தோற்றது. கோபமடைந்த காம்பிர்,'இந்திய வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடவில்லை' என குற்றம்சாட்டினார். இதன் விபரங்கள் 'மீடியா'வில் கசிந்தன. 'பயிற்சியாளர், வீரர்கள் இடையே 'டிரஸ்சிங் ரூமில்' நடக்கும் விவாதங்கள் தனிப்பட்டவை. ரகசியம் காக்கப்பட வேண்டும்' என காம்பிர் வலியுறுத்தினார். இதை 'லீக்' செய்ததாக அபிஷேக் நாயர். சர்பராஸ் கான் பெயர்கள் அடிபட்டன.
* கோல்கட்டா அணிக்கு காம்பிர் ஆலோசகராக இருந்த போது, அவருடன் அபிஷேக் நாயர் (பேட்டிங், துணை பயிற்சியாளர்), மார்னே மார்கல் (பவுலிங் பயிற்சியாளர்), டென் டஸ்காட்டே (பீல்டிங், துணை பயிற்சியாளர்) பணியாற்றினர். இவர்களே இந்திய அணி தலைமை பயிற்சியாளராக காம்பிர் பதவி ஏற்ற போதும் தொடர்ந்தனர். கோல்கட்டாவின் ஆதிக்கத்தை குறைக்க, அபிஷேக் நாயர் நீக்கப்பட்டிருக்கலாம்.

Advertisement