பங்கு சந்தை நிலவரம்

அன்னிய முதலீட்டாளர்கள் ஆர்வம்



தொடர்ந்து நான்காவது நாளாக நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் நேற்றும் ஏற்றம் கண்டன. நேற்று முன்தினம் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, நேற்று காலை வர்த்தக நேர துவக்கத்தில், இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. எனினும், இதன் பிறகு பணவீக்கம் குறைந்துள்ளது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு போன்ற உள்நாட்டு காரணிகளால், சந்தை குறியீடுகள் உயரத் துவங்கி, வர்த்தக நேர முடிவில், கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தன. சென்செக்ஸ் மீண்டும் 78,000 புள்ளிகளை கடந்தது.


கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 6.37 சதவீதமும்; நிப்டி 6.48 சதவீதமும் உயர்ந்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா - ஜப்பான் இடையேயான விவாதம் வெற்றிகரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தனர். வங்கித்துறை குறிப்பாக, தனியார் வங்கி பங்குகளே அதிகளவு வாங்கப்பட்டன.

புனித வெள்ளியை முன்னிட்டு, இன்று பங்குச் சந்தைகள் இயங்காது.

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 4,668 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.94 சதவீதம் அதிகரித்து,
66.47 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா உயர்ந்து, 85.38 ரூபாயாக இருந்தது.

Advertisement