அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து இழிவான பேச்சு

சென்னை:'சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

விலைமாதுவுடன் சைவ, வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, அச்சிட முடியாத வகையில் அசிங்கமாக பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்தது தொடர்பான வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் பொன்முடி பேசியது தொடர்பான வீடியோவை, நீதிமன்றத்தில் திரையிடும்படி, நீதிபதி தெரிவித்தார்.

அதன்பின், நீதிபதி கூறியதாவது:

அமைச்சரின் இந்த பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சகிக்க முடியாது



உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், பொன்முடி பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதா என, தமிழக டி.ஜி.பி., மாலை 4:45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல, அமைச்சரின் பேச்சு பெருவாரியாக சென்றடைந்து விட்டது.

மன்னிப்பு கேட்பதால், எந்த பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவொரு நடவடிக்கையும், இதுவரை எடுக்கப்படவில்லை.

நன்றாக தெரிந்தே, அமைச்சர் இவ்வாறு பேசி இருக்கிறார். அமைச்சரின் பேச்சு தொடர்பான வீடியோ, இன்னும் சமூக வலைதளங்களில் உள்ளது.

இதேபோன்ற பேச்சை வேறு எவரேனும் பேசியிருந்தால், இதற்குள் 50 வழக்குகள் வரையாவது பதிவு செய்யப்பட்டு இருக்கும்; யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.

ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ, அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே, நடிகை கஸ்துாரி, எச்.ராஜா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக, நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும், தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில், அதை தவறாக பயன்படுத்தும் வகையில், பொன்முடி செயல்படுவதாக உள்ளது.இந்த விவகாரத்துக்காக, அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா, இல்லையா; வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் ஏன் என்பது குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவோ அல்லது அட்வகேட் ஜெனரல் வாயிலாகவோ, டி.ஜி.பி., மாலையில் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

பேச தயங்க வேண்டும்



பின், மாலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

''அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதி கூறியதாவது:

ஒருவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக, அவர் எதையும் சொல்லலாம் என்ற எண்ணத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடாது.

எதிர்காலத்தில் இதுபோல கருத்துகளை மக்கள் முன் பேசவும் துணியக் கூடாது. அவ்வாறு பேச தயங்க வேண்டும்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், எதையும் பேச முடியும் என்கிற எண்ணத்தை, ஒருபோதும் கொடுக்கக் கூடாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.

வெறுப்பு பேச்சுக்களுக்காக, மற்றவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவர்களின் சொந்த கட்சியை சேர்ந்த ஒருவர் அத்தகைய கருத்துகளை தெரிவிக்கும்போது, அதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சாதாரண விஷயம் அல்ல



மற்றவர்களின் வெறுப்பு பேச்சுகளை, அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும்போது, அரசின் ஒரு அங்கமாக இருக்கும் ஒருவர் அவ்வாறு பேசும்போதும், அதே நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

அமைச்சர் கூறியது சாதாரண விஷயம் அல்ல. அதை நாம் அனைவரும் கேட்டு இருக்கிறோம்.

நான்கு அல்லது ஐந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீர்த்துப் போக செய்யாமல், ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அமைச்சருக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு இருக்கும்போது, அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல். வழக்கின் விசாரணையை வரும், 23ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்றைய தினம் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



தகுதி நீக்கம் கோரி வழக்கு




அமைச்சரவையில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் அல்லது தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்த வழக்கு, வரும் 24ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement