நிலுவை செலுத்தியும் 5,100 பேருக்கு பத்திரம் தரவில்லை வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் புகார்

சென்னை:கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், கடன் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தியும், பத்திரம் கிடைக்காமல் 5,100 பேர் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், மக்களுக்கு நியாயமான விலையில் வீட்டு மனை கிடைக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் இருந்தாலும், 526 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் கடன் நிலுவை அதிகமான நிலையில், அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2023 வரை அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அமலில் இருந்தது. இதை பயன்படுத்தி, நிலுவைத்தொகை செலுத்தியவர்களுக்கு, அதற்கான பத்திரம் கிடைக்காமல் உள்ளது என, வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தில் வசூலான நிலுவைத்தொகை, கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துக்கு சென்று விட்டது.

இத்தொகையை பயன்படுத்தி, தன் கடன்களை வீட்டுவசதி இணையம் முடித்து விட்டது. ஆனாலும், தவணை நிலுவையை செலுத்திய 5,113 பேருக்கு இன்னும் பத்திரத்தை இணையம் விடுவிக்கவில்லை.

கடந்த 2023ல் தவணையை முழுமையாக செலுத்தியவர்கள், இன்று வரை பத்திரம் பெற முடியவில்லை. இதனால், மீதம் உள்ள, 20,000 பேர் தவணை நிலுவையை செலுத்த தயங்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதுகுறித்த முழுமையான விபரங்களை, கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துக்கு தெரிவித்தாலும், அவர்கள் நிதித்துறை அனுமதிக்காக காத்திருப்பதாகக் கூறி கால தாமதம் செய்கின்றனர். இப்பிரச்னை தீராத நிலையில், புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வீட்டுவசதி துறை அமைச்சர் தலையிடாமல் இருப்பதால், சங்கங்கள், இணையம் இடையிலான பிரச்னை தொடர்கிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து பேசி, பிரச்னையை தீர்க்க, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement