ஹிந்துக்களுடன் ஒத்து போகாது பாக்., ராணுவ தளபதி பேச்சு

புதுடில்லி ''வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்திலும், ஹிந்துக்களுடன் நாம் வேறுபட்டவர்கள். இதை உணர்ந்தே முஸ்லிம்களுக்கு என தனி நாடு உருவாக்கப்பட்டது,'' என, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேசியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேசியதாவது:
நீங்கள் அனைவரும் பாகிஸ்தானின் துாதர்கள். நம் நாட்டின் உயர்ந்த கொள்கைகள், கலாசாரத்தை மறக்கக்கூடாது. உங்கள் குழந்தைகளுக்கு, நம் நாட்டின் வரலாற்றை கற்றுத் தாருங்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், ஹிந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள். இதை, நம் முன்னோர்கள் உணர்ந்தனர்.
நம் மதம், நம் பழக்க வழக்கங்கள், நம் பாரம்பரியங்கள், சிந்தனைகள், எண்ணங்கள் என அனைத்தும் வேறுபட்டவை. அதுவே, இரண்டு நாடுகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் ஒரே நாடாக இருக்க முடியாது என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தனர். அதனாலேயே தனி நாடு உருவாக போராடினர்; இதற்காக பல தியாகங்களை செய்தனர்.
நம் நாடு உருவானதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு சொல்லி கொடுங்கள். நம் நாட்டுடனான பிணைப்பை எப்போதும் விட்டுவிடக் கூடாது.
ஜம்மு - காஷ்மீர் என்பது, நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச் செல்லும் நரம்பு போன்றது. அதை நாம் மறக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நம் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீரில் உள்ள நம் சகோதரர்களை கைவிட மாட்டோம்.
பயங்கரவாத நடவடிக்கைகளால் தான், நம் நாட்டுக்கு முதலீடுகள் கிடைக்கவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் நம் வளர்ச்சியை தடுத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா?. 13 லட்சம் பேர் கொண்ட வலுவான இந்திய ராணுவத்தாலேயே, நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. பயங்கரவாதிகளால் முடியுமா?. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் இந்த பேச்சு, முஸ்லிம்களின் பாதுகாவலனாக அந்த நாடு உள்ளதாக காட்டிக் கொள்வதாகவே அமைந்துள்ளது. மேலும், இங்குள்ள முஸ்லிம்களை துாண்டிவிடுவது போல் அமைந்துள்ளதாக வெளியுறவுத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் பேச்சுக்கு, நம் வெளியுறவுத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மற்றொரு நாட்டில் உள்ள பகுதியை, தன் நாட்டின் நரம்பு என்று எப்படி கூற முடியும்? ஜம்மு - காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அதற்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள ஒரே தொடர்பு, அந்த நாட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியே. மற்றபடி, ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்