தனியார் மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை

சென்னை,:'எச்.ஐ.வி., எனப்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எச்.ஐ.வி., பாதித்தோர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அதன் நிறுவனர் கருணாநிதியின் அறிக்கை:

தமிழகத்தில், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டோர், 2 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 1.45 லட்சம் பேர், அரசு மருத்துவமனையில், ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இவர்கள் சார்ந்த குடும்பத்தில், 10 லட்சம் பேர் உள்ளனர். எனவே, எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு, தனி நல வாரியத்தை அரசு அமைக்க வேண்டும்.

எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாலிசி எடுக்க, காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாலிசி எடுக்க அனுமதிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் காப்பீடு திட்டத்தை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருக்கும், எச்.ஐ.வி., தொற்றாளர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை, 2,000 முதல் 3,000 ரூபாய் வரை அரசு நிதி வழங்குகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து மையத்தில் இரண்டு ஆண்டுகளாக டாக்டர்கள் இல்லாமல் உள்ளனர். எனவே, புதிய டாக்டர்களை நியமித்து, முறையான சிகிச்சைக்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement