முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது

சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டை, நேற்று காலை முற்றுகையிட முயன்ற, 100க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், 15,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு, பிப்., 4ல், 3,192 பணியிடங்களுக்கான நியமனத் தேர்வு நடந்தது. அதில், 2,803 பணியிடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பட்டப் படிப்புடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாய தமிழ் தகுதித் தேர்விலும், நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, வரையறுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும், கடந்த 12 ஆண்டுகளாக பலர் காத்திருக்கும் நிலையில், தற்போது 2,803 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு செய்வது ஏற்புடையது அல்ல. இதனால், தகுதியான ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2010ல், 21,811 பட்டதாரி ஆசிரியர்கள்; 2015ல் 20,171 பட்டதாரி ஆசிரியர்கள் என, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மொத்தம், 41,982 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது, அவற்றுடன் ஒப்பீட்டளவில் கூட இல்லை.

அதனால், வரும் பள்ளி கல்வி மானிய கோரிக்கையின்போது, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement