பால் உற்பத்தியை பெருக்க ரூ.2,000 கோடி கடன்: ராஜகண்ணப்பன் அறிவிப்பு
சென்னை:''பால் உற்பத்தியை பெருக்க, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது. பால் கூட்டுறவு சங்கம் ஆரம்பித்தால், ஒரு லட்சம் ரூபாய் தருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது,'' என, பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - சண்முகையா: துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி சிங்கத்தாகுறிச்சியில், 3,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 5,000 லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும்.
இங்குள்ள புதுக்கோட்டையில், 7,000 லிட்டர் பால் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு, 10,000 லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்துத் தர வேண்டும். அப்போதுதான் கறவை மாடுகள் அதிகரித்து, பால் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: துாத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில், இரண்டு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டுமே உள்ளன. இங்குள்ள செக்காரக்குடியில், 5,000 லிட்டர் பால் குளிரூட்டும் மையம் வாயிலாக, 2,235 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
பா.ம.க., - ஜி.கே.மணி: பென்னாகரத்தில் கறவை மாடுகள் அதிகம் உள்ளன. சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயம் செய்யாதவர்கள் கூட கால்நடைகளை வளர்த்து, பொருளாதாரம் ஈட்டி வருகின்றனர். முறையான பணம் வழங்காததால், இங்குள்ளவர்கள் தனியாருக்கு பால் வழங்கி வருகின்றனர்.
இப்போது, கூட்டுறவு சங்கங்களை அரசு சீர் செய்து வருகிறது. எனவே, நான்கு இடங்களில், 5,000 லிட்டர் பால் குளிரூட்டும் மையம் அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: தர்மபுரியில் பால் கொள்முதல் குறைவாக உள்ளது. தனியாரிடம் இருந்து, அமுல் நிறுவனத்திற்கு அதிக விலை கொடுத்து பால் வாங்கினர். அவர்கள் அதிக விலையில் விற்பதால், அதிக விலை கொடுத்து வாங்கினர். ஆவினால் அப்படி செய்ய முடியாது. இங்கு பால் உற்பத்தியாளரும் ஏழை; வாங்குபவரும் ஏழை. பால் உற்பத்தியைப் பெருக்க, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது.
கூட்டுறவு சங்கம் ஆரம்பித்தால், ஒரு லட்சம் ரூபாய் தருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. இன்னும் அரசாணை வெளியிடவில்லை.
அரசாணை வந்தால் பணம் கொடுப்பர் என நினைக்கிறேன். பால் கொள்முதல், 5,000 லிட்டர் இருக்கும் இடத்தில், பால் குளிரூட்டும் நிலையம் அமைத்துத் தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்