தமிழக விண்வெளி தொழில் கொள்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை:தமிழக விண்வெளி தொழில் கொள்கைக்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தொழில் துறை உருவாக்கியுள்ள விண்வெளி தொழில் கொள்கை - 2025க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்திற்குப் பின், தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:

விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தகுதியான, திறமையானவர்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று இலக்குகளையும் அடிப்படையாக வைத்து, தமிழக விண்வெளி தொழில் கொள்கை - 2025 உருவாக்கப்பட்டு உள்ளது.

தொழில் துறையில் பெரும்பாலும், உற்பத்தித் துறையில் கவனம் இருக்கும். ஆனால், விண்வெளி தொழில் கொள்கையில், சேவை துறையிலும் கவனம் இருக்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் விண்வெளி தொழிலில் தமிழகம் ஒரு பாய்ச்சலுக்கு தயாராவதற்கான உத்வேகத்தை, முதல்வர் கொடுத்துள்ளார்.

இதன் வாயிலாக, 25 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.

மேலும், 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு, 'பேக்கேஜ்' வழங்கப்படும்.

இந்த கொள்கையால் உலக அளவில் இருக்கும் தொழில் முனைவோர், தமிழகம் நோக்கி வருவர். குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பானதாக அது அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement