சாலை திருப்பத்தில் பயனில்லாத நிழற்குடை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கிருஷ்ணாகுப்பம் மற்றும் வேலன்கண்டிகை இடையே, அம்மனேரி கூட்டு சாலை அமைந்துள்ளது.

இந்த கூட்டு சாலையில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் அம்மனேரி அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு இதுவரை பேருந்து வசதி கிடையாது.

இந்நிலையில், திருத்தணி நெடுஞ்சாலையில், அம்மனேரி கூட்டு சாலைக்கு எதிரே நிழற்குடை உள்ளது. இது, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இதுவரை எந்தவொரு பயணியும், இந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிழற்குடையை ஒட்டி, கிருஷ்ணாகுப்பம் ஏரியின் கலங்கல் பகுதியும் அமைந்துள்ளது.

இந்த முச்சந்தியில் சாலை திருப்பம் உள்ளதால், எதிரில் வரும் வாகனங்களை மிக அருகில் வந்த பிறகே வாகனஓட்டுனர்களால் கவனிக்க இயலும். இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.

பயனில்லாத நிழற்குடையை அகற்றி, சாலையை நேராக அமைத்தால், விபத்து அபாயம் குறையும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement