கேரட் விலை மலிவு: விவசாயிகள் வேதனை

கோத்திகிரி:கோத்தகிரி பகுதியில், கேரட்டிற்கு போதிய விலை இல்லாததால், விவசாயிகள், அறுவடை செய்த கேரட்களை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி கூக்கல்தொரை சுற்றுப்புற பகுதிகளில், கேரட் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடையாகும் கேரட் ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம், 60 முதல் அதிகபட்சம், 100 ரூபாய் விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு, இழப்பு இல்லாமல் ஓரளவு லாபம் கிடைக்கும்.

இந்நிலையில், நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, ஒரு கிலோ கேரட்டுக்கு, 5 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதன் காரணமாக, விவசாயிகள் விரக்தி அடைந்து, அறுவடை செய்த கேரட்டை, ஆற்றிலும், சாலையோரத்திலும் கொட்டி வருகின்றனர்.

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''நீலகிரி மாவட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கேரட் பயிரிட்டுள்ளனர். தோட்டத்திற்கு செலவிட்ட முதலீடு கூட கிடைக்காத வகையில், ஒரு கிலோ கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளில், 5 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு அதிகரித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு உரிய பயிர் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement