மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு குறுவை சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

கரூர்:கடந்த, பத்தரை மாதங்களில் மேட்டூர் அணைக்கு, 292.97 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ள நிலையில், அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மூலம், டெல்டா மாவட்டங்களில், 16 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12ல், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில், அணைகள் நிரம்பிய பிறகு உபரி நீரை மட்டுமே தொடர்ந்து திறந்து வருகிறது.

வறட்சி காலத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, தண்ணீர் பகிர்ந்தளிப்பது கிடையாது. கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணை பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை பலமுறை முழு கொள்ளளவு எட்டியது. இதன் காரணமாக, பத்தரை மாதங்களில் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்துள்ளது.

தமிழக நீர்வளத்துறையின் புள்ளி விபரங்கள்படி, 2024 ஜூனில், 2.26 டி.எம்.சி., ஜூலை, 96.54, ஆக., 78.39, செப்., 27.62, அக்., 39.72, நவ., 19.83, டிச.,18.48, ஜன., 3.53, பிப்.,2.04, மார்ச், 3.06 டி.எம்.சி., ஏப்., 15 வரை, 1.50 டி.எம்.சி., என மொத்தம், 292.97 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. இந்த, பத்தரை மாதங்களில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி கிடைக்க வேண்டிய நீரை விட, 119.47 டி.எம்,சி.,தண்ணீர் கூடுதலாக கிடைத்துள்ளது. தற்போது மேட்டூர் அணை, 107.48 அடியாகவும், 74.87 டி.எம்.சி., தண்ணீர் இருப்பும் உள்ளது. இது மொத்த கொள்ளளவில், 80.11 சதவீதம் என்பதால், ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.

இது குறித்து, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில்,'' டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். காவிரி ஆற்று பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடைமடை வரை சாகுபடி தண்ணீர் செல்லும். போதுமான அளவு விதை, உரங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், சாகுபடி தொடங்குவதற்கு முன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement