புதுப்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பது எப்போது: மக்கள் படும் அவதி அரசுக்கு தெரியுமா?

புதுச்சேரி: பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டை திறக்காமல், அரசு காலம் கடத்தி வருவதால் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மறைமலை யடிகள் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி பஸ் ஸ்டாண்ட் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது.
மக்கள் தொகைக்கு ஏற்ப பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடி மதிப்பில், வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.
4.41 ஏக்கர் பரப்பளவில் 22 டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள், 12 மினி பஸ்கள், 12 ஆம்னி பஸ்கள் நிறுத்த தனித்தனி நடைமேடை, ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு கூடம், டிக்கெட் முன்பதிவு மையம், லாக்கர் ரூம், 2 கழிப்பறை வளாகம், ஏ.டி.எம்., மையம், பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்கியது.
இப்பணி தடையின்றி, விரைந்து முடிப்பதற்காக பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக கடந்த ஜூன் மாதம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், பஸ் ஸ்டாண்ட் குண்டும், குழியுமாக உள்ளதாலும், மழை பெய்தால் சேறும், சகதியுமாகவும், வெயில் காய்ந்தால் புழுதி புயலாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதனால், பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து கட்டுமான பணி கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பஸ்களை இயக்கி சோதனையோட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஜனவரி மாதம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறப்பட்டது.
மக்களின் வரிப்பணம் ரூ.29 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா என்ன காரணத்தினாலோ, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காரணங்களுடன் தள்ளிக் கொண்டே போகிறது.
இதனால், வேலைக்காகவும், சிகிச்சைக்காகவும், பொழுது போக்கிற்காகவும் தினசரி புதுச்சேரிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினம், தினம் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் படும் அவதியை ஆட்சியாளர்கள் கண்டும், காணாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இனியேனும் அரசு காலம் கடத்தாமல், பஸ் ஸ்டாண்ட்டை விரைந்து திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!