நீர் மின் உற்பத்தியில் மத்திய அரசு இலக்கை மிஞ்சிய தமிழகம்

14

சென்னை : மத்திய அரசு, 2024 - 25ல், தமிழகத்தில், 400 கோடி யூனிட் நீர் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்த நிலையில், அதை விட கூடுதலாக, 80 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மழை காலங்களில் அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


இதில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு சராசரியாக, 75 காசாக உள்ளது. இருப்பினும், போதிய மழை இல்லாததால், தினமும் சராசரியாக, 750 - 1,000 மெகா வாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.


மத்திய மின்சார ஆணையம், 2024 - 25ல், தமிழக நீர் மின் நிலையங்களில், 400 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்தாண்டில் தென் மேற்கு பருவ மழைப் பொழிவு அதிகம் இருந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருந்தது.


இதையடுத்து, நீர் மின் நிலையங்களில், 480 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, 2023 - 24ல், 371 கோடி யூனிட்களாக இருந்தது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட, கடந்த ஆண்டில் கூடுதலாக, 80 கோடி யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

Advertisement