உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? 'என்கவுன்டர்' பற்றி நீதிபதி சரமாரி கேள்வி!

45

மதுரை : 'பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது?' என, ரவுடி வெள்ளை காளி சகோதரி தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.


திருச்சி, குண்டூர் சத்தியஜோதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் சகோதரர் வெள்ளை காளி, 2019 முதல், சென்னை புழல் சிறையில் கைதியாக உள்ளார். மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்டார்; அந்த வழக்கில் வெள்ளை காளியின் பெயரை சேர்த்தனர். இந்த கொலைக்கும், அவருக்கும் தொடர்பில்லை.


எதிர்தரப்பைச் சேர்ந்த வி.கே.குருசாமி, ஆளுங்கட்சியில் உள்ளார். இதனால் கிளாமர் காளி கொலை வழக்கில் கைதான எங்கள் உறவினர் சுபாஷ் சந்திரபோஸை, போலீசார் என்கவுன்டரில் கொன்றனர்.


சிறையிலிருந்து வெள்ளை காளியை போலீசார் விசாரணைக்கு அழைத்து வரும்போது, சட்டவிரோதமாக என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது; அவரை பாதுகாக்க வேண்டும். சிறையிலிருந்தவாறே காணொலியில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்.


'அவரை போலீஸ் காவலில் எடுக்கும் போது, அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சத்தியஜோதி, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு, 'வெள்ளை காளி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் கிளாமர் காளி கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளார். என்கவுன்டர் செய்ய உள்ளதாகக் கூறுவது தவறானது' என, தெரிவிக்கப்பட்டது.


நீதிபதி, 'பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக என்கவுன்டர்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளி தப்பி ஓடினால், முழங்காலுக்கு கீழே சுட்டுப் பிடிக்கலாம். திட்டமிட்டு ஒரு உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் என்கவுன்டர் தான் தீர்வா?' என, கேள்வி எழுப்பினார். பின்னர், டி.ஜி.பி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்., 29க்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement