பள்ளித் துாய்மைப்பணியாளருக்கு எட்டு மாதங்களாக சம்பளமில்லை  துயர் துடைப்பாரா கலெக்டர் சங்கீதா

மதுரை: மதுரை மேற்கு கல்வி ஒன்றியத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால் வேதனையில் உள்ளனர்.

இந்த ஒன்றியத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் அரசுப் பள்ளிகளில் துாய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு மேற்கு ஒன்றியம் மூலம் மாதம் ரூ.ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்காமல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஒன்றியத்தில் மட்டும் 2024 செப்டம்பர் முதல் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

இதுகுறித்து தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாரதிசிங்கம், வட்டார தலைவர் செல்வகுமரேசன் கூறியதாவது: எட்டு மாதங்களாக சம்பளம் வழங்காவிட்டாலும் மாணவர்கள் நலன் கருதி அவர்கள் துாய்மைப் பணியாற்றி வருகின்றனர். சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பண உதவி செய்கின்றனர். சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டால் அதற்கான நிதி இன்னும் வரவில்லை என்கின்றனர். துாய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

ஏப்.30 பள்ளி கடைசி நாள். அதற்குள் எட்டு மாத சம்பளத்தை வழங்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுத்து அவர்களின் துயர் துடைக்க வேண்டும் என்றனர்.

Advertisement