உங்கள் உணவு தரமானதா : ஆய்வு செய்யும் உணவுப்பாதுகாப்புத்துறை

23

மதுரை: உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் 2024 - 25ல் ஓட்டல் பேக்கரி, மளிகைக் கடை உட்பட 1281 கடைகளில் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 81 மாதிரிகள் தரமற்ற, பாதுகாப்பற்றது என ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மளிகைக் கடை முதல் மட்டன் கடை, பேக்கரி, உணவகங்கள் வரை ஓராண்டில் 35 ஆயிரத்து 255 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமில்லாத 566 கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்து 1,667 கிலோ உணவு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது என்கிறார் துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் 1281 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பியதில் 1009 மாதிரிகள் தரமானது எனச் சான்றுகள் வந்துள்ளன. 81 மாதிரிகள் தரமற்ற உணவு என்பதால் மாவட்ட நீதிமன்றம் மூலம் அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

லேபிள் குறைபாடு, இரண்டாம் தர (சப் ஸ்டாண்டர்ட்) உணவு குறித்த 45 மாதிரிகளுக்கு டி.ஆர்.ஓ., நீதிமன்றம் மூலம் 45 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

ரூ.11.44 லட்சம் அபராதம்



ஓராண்டில் மாவட்ட நீதிமன்றத்தில் 18 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.6 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும், டி.ஆர்.ஓ., நீதிமன்றம் மூலம் 52 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்து 2200 அபராதமும் விதிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்ட 273 புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ளதால் பழங்கள் கல் வைத்து பழுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் 94440 42322 வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement