கேள்விக்குறியாகும் தொழிலாளர் வாழ்வாதாரம்; தொடரும் விசைத்தறி - கல்குவாரி வேலைநிறுத்தம்

பல்லடம் : தொழில் துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக, வருவாய் இழந்து பாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில், பிரதான தொழில்களாக உள்ள விசைத்தறி, கல்குவாரி தொழில் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்களும், 24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

விசைத்தறி



அதிகளவில் வேலை வாய்ப்பை அளிப்பதில் ஜவுளி தொழில் துறை முதல் இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நுால் பெற்று, ஒப்பந்த கூலி அடிப்படையில் நெசவு செய்து வரும் விசைத்தறியாளர்கள், கடந்த, 2014ம் ஆண்டு முதல் கூலி உயர்வுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு பெற முடியாமல், தொழிலையும் விட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

கட்டுப்படியாகாத கூலி, பாவு நுால் குறைப்பு உள்ளிட்டவற்றால், விசைத்தறி தொழில் நலிவடைந்து, தறிகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கூலி உயர்வை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள விசைத்தறியாளர்கள், தற்போது, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கியுள்ளனர். விசைத்தறியாளர்கள் தொடர்ந்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களும் வேலை மற்றும் வருவாயை இழந்து தவித்து வருகின்றனர்.

கல்குவாரி



விசைத்தறி தொழிலை போன்றே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாகவும், கட்டுமான துறைக்கு அத்தியாவசியமாகவும் உள்ள கல்குவாரி தொழிலிலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்குவாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள், விதிமுறைகளை தளர்த்துவது மட்டுமன்றி, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், உற்பத்தி நிறுத்தத்தால், கட்டுமான தொழில் உட்பட அரசு ஒப்பந்த பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

Advertisement