10 கி.மீ., மாரத்தான் போட்டி 27ல் பெங்களூரில் நடக்கிறது

பெங்களூரு: நகரங்களில் வாழும் பலரும் நகர வாழ்க்கையில் கவனம் செலுத்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தவறி விடுகின்றனர். உடலை ஆரோக்கியமாக வைக்க தினமும், உடற்பயிற்சி, ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் செய்வது அவசியமாகும்.

இவ்வகையில், பெங்களூரு வாசிகளின் உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் வரும் 27ம் தேதி மிகப்பெரிய அளவிலான மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. 'டி.சி.எஸ்., வோர்ல்டு 10கே' எனும் தலைப்பில் நடக்க உள்ளது. இப்போட்டியை தனியார் நிறுவனமான 'டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ்' நடத்துகிறது.

-முன்பதிவு



மாரத்தான் போட்டி வரும் 27ம் தேதி காலை 6:10 மணிக்கு கப்பன் சாலையில் உள்ள ஆர்.எஸ்.ஏ.ஓ.ஐ., கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. மொத்தம் 10 கி.மீ., நடக்கிறது. கப்பன் சாலையில் துவங்கி ஹலசூரு ஏரிக்கரை, டிக்கென்சன் சாலை, காமராஜ் சாலை, ராஜ்பவன் சாலை, அம்பேத்கர் வீதி வரை சென்று, மீண்டும் கப்பன் சாலையில் உள்ள பீல்டு மார்ஷல் மானக் ஷா பரேடு மைதானத்தில் முடிவடைகிறது.

இதில் பங்கேற்க வேண்டும் என்றால், வரும் 20ம் தேதிக்குள் tcsworld10k.procom.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்காக 3 கி.மீ., போட்டி நடத்தப்படும். இப்போட்டியில் நட்சத்திர தடகள வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வயது அடிப்படையில் பரிசுத்தொகை வழங்கப்படும்.

ஒலிம்பிக் வீராங்கனை



இப்போட்டியில் பிரபல தடகள வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான அமெரிக்காவை சேர்ந்த தலீலா முகமது கலந்து கொள்ள உள்ளார். இவரது வருகை சக போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து உள்ளது. இவர் பங்கேற்பாளராக மட்டுமின்றி, போட்டியின் துாதராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான உதய் குமார் கலந்து கொள்கிறார். கோல்கட்டாவை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தார். இதன்பின், 16 மாநிலங்களில் நடந்த 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார்.

தற்போது, பெங்களூரில் நடக்க உள்ள மாரத்தான் போட்டியில் இரண்டாவது முறையாக கலந்து கொள்கிறார். நம் நாட்டின் பிரபல தடகள வீரர்களான கிரண் மாத்ரே, கார்த்திக் குமார், சவான் பர்வால், புனித் யாதவ் ஆகியோரும், தடகள வீராங்கனையரான லில்லி தாஸ், ரீமா பட்டேல், சோனியா மற்றும் பலரும் கலந்து கொள்கின்றனர்.

Advertisement